வாழிய நிலனே - 5
- சுபஸ்ரீ
- Feb 14, 2024
- 7 min read
Updated: Feb 14, 2024
வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.
(முதற்கனல் 19 : அணையாச்சிதை , ஓவியம்: ஷண்முகவேல்)
"விஜயபுரிக்கு செல்லும் வழியில் "தானிட்ட முட்டைகளை அணைத்துச்சுருண்டிருக்கும் நீலநாகம் போல" கிருஷ்ணை நதி நான்கு குன்றுகளைச் சுற்றிக்கொண்டு செல்வதை ஒரு மலைமேலிருந்து பார்க்கிறான் இளநாகன்."
காளஹஸ்தி
காஞ்சியிலிருந்து கிளம்பி பெருவணிகப்பாதையில் காளாமுகர்கள் எனும் சிவப்படிவர்களைக் கண்டு அவர்களுடன் பாடியபடி மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காளஹஸ்தி என்ற காட்டுக்கு வந்துசேர்கிறான் இளநாகன். பன்னிருநாட்கள் நடந்து அவர்கள் காளஹஸ்தியை அடைகிறார்கள்.
சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் அமைந்த சிவக்குறியை வணங்க வைரவம், வாமனம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம் என்னும் ஆறு சிவயோகநெறியைச் சேர்ந்த அறுவகைப் படிவர்களும் வந்து குழுமி இருக்கிறார்கள். அங்கு தாளம் துடிக்க அதன் உச்சத்தில் சிவப்படிவர்கள் மேலும் மேலும் எழுந்து தாமாகவே வந்து சூலமேறுவதைப் பார்க்கிறான். எங்கும் சடலங்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. நிலையழிந்து தன்நினைவின்றி அங்கிருந்து வெளியேறுகிறான் . காட்டிலிருந்து வெளியேறி வண்டிப்பாதையைச் சென்றடைந்து காஞ்சியிலிருந்து வரும் வணிகர் குழுவைக் கண்டடைகிறான். நலம் குன்றிய அவனை கிருஷ்ணை ஆற்றங்கரையில் இருந்த சித்தபதம் என்னும் வேளிர்களின் ஊரில் ஒப்படைத்துவிட்டு குழு செல்கிறது. ஒருமாதம் கழித்து அங்கிருந்து கிளம்பி, விஜயபுரிக்கு செல்லும் கீகடர் என்னும் சூதரோடு விஜயபுரம் செல்லும் பாதையில் நடக்கிறான்வெற்றித்திருநகர்
விஜயபுரிக்கு செல்லும் வழியில் "தானிட்ட முட்டைகளை அணைத்துச்சுருண்டிருக்கும் நீலநாகம் போல" கிருஷ்ணை நதி நான்கு குன்றுகளைச் சுற்றிக்கொண்டு செல்வதை ஒரு மலைமேலிருந்து பார்க்கிறான் இளநாகன். நான்கு மலைகள் நிற்கும் அந்த நிலம் ‘நால்கொண்டா’ என்று அழைக்கப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கு அகழ்வு மேற்கொள்ளும்போது குரங்குமனிதர்களின் எலும்புக்கூடுகள் அங்கே கிடைத்திருப்பதால், மிகத் தொன்மையான அந்நிலமே முற்காலத்தில் கிஷ்கிந்தை என்று கீகடர் கூறுகிறார்.
கோதாவரிமுதல் நர்மதை வரை விரிந்துகிடந்த குந்தலநாடு(ஆந்திரா) பன்னிரண்டாயிரம் கிராமங்களையும் ஆறாயிரம் மலைகளையும் ஆயிரம் காடுகளையும் கொண்டிருக்கிறது. கிருஷ்ணை நதியின் கரையிலிருக்கும் விஜயபுரி வேசரநாட்டு குந்தலர்களின் தலைநகர். நான்கு சிறு குன்றுகளை உள்ளடக்கிய பெருங்கோட்டையால் சூழப்பட்டிருக்கிறது. கிருஷ்ணை வழியாக படகுகளும் எட்டு பெருஞ்சாலைகள் வழியாக வண்டிகளும் வந்து கூடும் விஜயபுரியை ஆந்திரேசன் கிருஷ்ணய்ய வீரகுந்தலன் ஆட்சி செய்கிறான்.
விஜயபுரி செல்லும் வழியில், நான்கு மலைகளால் சூழப்பட்டதால் நால்கொண்டா என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து கீழே தெரிந்த நகரத்தை நோக்குகிறான் இளநாகன். அவன் அதுவரை கண்ட நகரங்களிலேயே அளவில் மிகப்பெரியது விஜயபுரி (நாகார்ஜுனகொண்டா).
அந்தப்பகுதியின் இயற்கை நில அமைப்பு எவ்விதம் அமைந்திருக்கிறது, இயற்கையான பாதுகாப்பு அரண்களாக எவை இருந்திருக்கக்கூடும், அந்தப் பகுதியின் விளைபொருளாகவோ, வளமாகவோ எவை இருந்திருக்கக்கூடும், ஒரு குறிப்பிட்ட பொருளின் வளம் அல்லது தட்டுப்பாடு அம்மக்களின் வாழ்க்கை முறைகளை எவ்விதம் நிர்ணயித்திருக்கும், ஒரு நகரம் விரிவதற்கான சாதகமான காரணி என்னவாக இருந்திருக்கும், அது அப்பகுதியின் அரசியலை எவ்விதம் பாதித்திருக்கும் என்று பல்வேறு வரலாற்று, சமூக, நிலவியல் தகவுகளைக் கருத்தில் கொண்டு, தனது விரிவான பயண அனுபவங்களோடு ஊடு பாவாக்கி கற்பனையில் நெய்திருக்கிறார் ஆசிரியர்.
நான்கு குன்றுகளுக்கு நடுவே உள்ள இடைவெளிகளை மண்கோட்டையாலும் ஆழமான அகழிகளாலும் அகழிக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த செயற்கை காட்டினாலும் இணைத்து நகரத்தை பாதுகாத்திருக்கின்றனர். கிருஷ்ணை வழியாகவே தென்புலத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்நகரம். காளஹஸ்தியிலிருந்து வந்த வண்டிப்பாதை எத்திப்பொத்தலா என்னும் சிற்றூரில் நின்றுவிட அங்கிருந்து கிருஷ்ணையின் மேட்டில் ஏறி படகுகளில் கிருஷ்ணை வழியாக படகுகளில்தான் விஜயபுரிக்கு பாதை. மலைமேல் ஏறி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பின் உயரமற்ற முள்மரங்கள் பரவிய மலைச்சரிவை அடைந்தே கிருஷ்ணையை அடைய முடிகிறது.
எடுத்து ஊற்றியது என்னும் பொருள் கொண்ட எத்திப்பொத்தலா பேரருவியின் ஓசையும் வானிலெழுந்த நீர்ப்புகையும் நெடுந்தொலைவுக்கு அப்பால் தெரிந்தன.
அந்தப் பாறைநிலத்தின் அமைப்பையும், தமிழக மற்றும் திருவிட மலைகளுக்கும் இதற்குமான வேறுபாடு இவ்விதம் குறிப்பிடப்படுகிறது
கருமேகங்கள் கல்லானதுபோலத்தெரிந்தன தமிழ்நிலத்துப் பாறைகள். திருவிடத்துப் பாறைகள் பேருருவக் கூழாங்கற்களின் சிதறல்களாகவும் குவைகளாகவும் தோன்றின. ஏட்டுச்சுவடிக்கட்டுகளை அடுக்குகளாகக் குவித்ததுபோலத் தெரிந்தன நால்கொண்டாவின் பாறைக்கட்டுகள்.
அங்கு திகழும் பருவநிலையும் அது சார்ந்த வாழ்வும் காட்டப்படுகிறது. விஜயபுரியின் வெயில் தென்னிலங்களில் அவன் பார்த்த கடுமையான வெயிலை எல்லாம் விட மிகக் கடுமையாக இருக்கிறது. அங்கிருந்த வீடுகளனைத்துமே அந்த வெயிலை உள்ளே உணராதிருக்கும் பொருட்டு கல்லடுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. சுவர்கள், கூரைகள் அனைத்துமே ஏட்டுச்சுவடிக் கட்டுகளால் ஆனவை போன்ற பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டவை. குகைக்குள் இருப்பதுபோல அறைகள் குளிர்ந்திருக்கும் வீடுகள். கட்டடங்களின் மேல் குடுமித்தலைபோல புல் வளர்க்கப்பட்டிருப்பதை காண்கிறான். அங்கே ஒரு சிறிய வீட்டில் ஒரு ஏழை மூதன்னை தந்த சுண்டக்காய்ச்சிய குழம்பையும் ஊறுகாயும் வைத்துக் கொண்டு பழைய சோறும் மோரும் உண்கிறார்கள். அந்த வெம்மைக்கு ஏற்ற உணவு.
நெற்குவைநகர்
இளநாகனும் கீகடரும் தான்யகடகத்திற்கு பொதிசுமந்த திமில்களில் கிருஷ்ணையின் பெருக்கில் பயணிக்கிறார்கள். அப்பகுதியில் விளையும் நெல் அனைத்தும் கிருஷ்ணை வழியாக தான்யகடகத்திற்கு வந்து சேர்வதால்தான் அது தான்யகடகம்(தாரணிக்கோட்டா) - நெற்குவை நகர் என்று அழைக்கப்படுகிறது
இப்பகுதியில் சாதவாகனர்களைக் குறித்தறிய முடிகிறது. சாலவனம் என்று அழைக்கப்பட்ட அப்பகுதியை ஆண்ட சாலவாகனர்கள் அரசர்களாகி சாதவாகனர் என்றும் சதகர்ணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சாதவாகன தேசத்தின் எல்லைகள் கிழக்கே கலிங்கமும் வடக்கே விதர்பமும் மேற்கே மாளவமும் என்று இருக்கிறது. பாரதவர்ஷத்தின் கரிய நீள் குழல் என்று அழைக்கப்படும் கிருஷ்ணையின் நீருக்கு இரும்புச்சுவை இருப்பதால் உண்டாவதே அதன் ஆழ்நீலநிறம் என்ற குறிப்பும் வருகிறது. தான்யகடகத்தின் துறைக்குமேல் உருளைப்பாறைகளை அள்ளிவைத்து கட்டியதுபோன்ற கோட்டைச்சுவரின் உச்சியில் சதகர்ணிகளின் அமர்ந்த மாகாளைச் சிலை தெரிகிறது.
தான்யகடகத்தின் வணிகர்கள் சொல்பணம் என்று சொல்லையே பொருளாகக் கொண்டு பொன் பெற்றுக்கொண்டு நிகழ்த்தும் வணிகத்தை முதல் முறையாகப் பார்க்கிறான் இளநாகன். அதற்கான பொருட்கள் கடைகளில் இல்லாமல் கிருஷ்ணையின் கரையிலேயே கைமாறக் காத்திருக்கின்றன.
தான்யகடகத்தின் அறச்சாலையில் சூடான அவல்பிட்டும் அக்காரவிழுதிட்டுப் புரட்டிய அரிசியுருண்டைகளும் ஆவியெழும் சுக்குநீரும் இரவுணவாகக் கொள்கிறார்கள். அங்கே காலையில் திருவிடத்தின் சிறப்பு உணவு - வறுத்த அரிசியை பொடித்து கடுகும் கறிவேப்பிலையும் எள்ளெண்ணையில் தாளித்துக் கிண்டி இறக்கும் மாவுணவு(உப்புமா) உண்கிறார்கள்.
அரசப்பெருநகர்
தான்யகடகத்தில் இருந்து கடல்முகப் பெருந்துறைகொண்ட இந்திரகிலத்துக்கு(விஜயவாடா) வந்து சிலநாட்கள் தங்கியபின் கோதாவரியைப் பார்ப்பதற்காக வடமேற்கே சென்ற பொதிவண்டிகளுடன் இணைந்து கொள்கிறான் இளநாகன். சிற்றூர்கள் செறிந்த பெருஞ்சாலை வழியாக எழுபதுநாட்கள் பொதிவண்டிகளுடன் சென்று அஸ்மாகநாட்டை(இன்றைய தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள் அஸ்மாக தேசம் என்றழைக்கப்பட்ட 16 மகாஜனபதங்களில் ஒன்று) அடைகிறான். கோதையின் கரையில் எழுந்த சிறிய படகுத்துறை நகர்களில் ஒன்றாகிய வெங்கடபுரியிலும் நரசபுரியிலும்(நர்சாபூர்) சிலமாதங்கள் தங்கி பின்னர் பாமனூரிலிருந்து படகிலேறி ராஜமகேந்திரபுரியை(ராஜமுந்திரி) வந்து சேர்கிறான். கோதாவரி கடல்முகம் கொள்ளும் ஆழ்ந்த காயலின் ஓரத்திலிருந்த ராஜமகேந்திரபுரியின் துறையில் சிறுபறவைகள் போல நாவாய்கள் அலைமீது ஆடிக்கொண்டிருக்கின்றன.
ராஜமகேந்திரபுரி சதகர்ணிகளின் வடக்கு எல்லையில் இருந்ததால் கலிங்கமும் சாலிவாகனமும் ஒன்றுடன் ஒன்று பொருதி வென்றவர் வசம் அந்நகர் கைமாறுகிறதுஅப்போது அந்நகரம் சதகர்ணிகளிடம் இருக்கிறது என்பதை அங்கிருக்கும் மாகாளை வடிவத்தைக் கண்டு இளநாகன் அறிகிறான்.
பீதர்களின் மாபெரும் கலங்களுக்காகவே அமைக்கப்பட்ட நூற்றெட்டு முகநீட்சிகள் கொண்ட அப்பெருந்துறைமுகம், நூற்றுக்கணக்கான காவல் மாடங்களுடன் பல்லாயிரம் வணிகர்களும் ஏவலரும் வினைவலரும் எழுப்பிய குரல்கள் இணைந்து பேரோசையுடன் திகழ்கிறது. கோட்டையின் இருபக்கமும் பொதிவண்டிகள் நிறைவகுத்து நிற்கிறது. துறைமேடையில் சிற்பிகள் ஆணைகளைக் கூவ, யானைக்கூட்டங்கள் இரும்புச்சக்கரங்களை சுழற்ற கனத்த தடிகளாலான துறைமுகப்பு இரு பாலங்களாக மெல்ல நீண்டு பீதர்கலத்தின் அடித்தளத்தைத் தொட்டு இணைந்துகொள்கிறது. பெருங்கலங்கள் கொண்டும் கொடுத்ததும் வணிகம் பெருகிய துறைநகர். ராஜமகேந்திரபுரி பெருவணிகர்களின் நகரம். மாளிகைகளின் கூரைகள் பீதர்நாட்டு வெண்களிமண்ணாலான ஓடுகள் பொருத்தப்பட்டு வெள்ளையானைநிரை போல நிற்கும் பெருநகர். வணிகவீதி பீதநாட்டின் வீதிபோலவே தோன்றுமளவுக்கு பீதர்கள் நிறைந்திருக்கிறார்கள். சாலிவாகன நாடெங்குமிருந்து பரத்தையர் வந்து குழுமும் நகர்.
கலிங்கபுரி
கலிங்கபுரி (ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள கலிங்கபட்டணம்) வம்சதாரா நதி கடல் சேரும் இடத்தில் இருக்கிறது. காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் மொழியில் காச்சபாமனூரு என்று குறிப்பிடப்படும் இந்த கடல் துறை கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ராஜமகேந்திரபுரியில் இருந்து வணிகர்களுடன் பாறைகள் உடைந்து சிதறிப்பரந்த ஆந்திரநிலத்தின் வறண்ட மலைப்பாதைகள் மற்றும் பொட்டல்நிலச்சாலைகள் வழியாக ஒன்பது மாதம் பயணம் செய்கிறான். அந்த வறண்ட நிலத்தில் மக்கள் வாழும் தடங்களே இல்லாதிருக்க, அப்பகுதிகளில் அருகர்கள் நடத்தும் அறச்சாலைகளே இளைப்பாறுவதற்கும் உணவுக்கும் ஒரே வழி. பனையோலைவேயப்பட்ட கொட்டகைக்குள் மண்ணுருவங்களாக அருகர்கள் ஊழ்கத்தில் அமர்ந்த அறச்சாலை. அரசமரத்தின் மேல் மஞ்சள்நிறமான கொடி பறப்பது அறச்சாலைகளை அடையாளம் காண உதவுகிறது.
வம்சதாராவின் கரையில் அருணர் என்னும் சூதரை சந்திக்கிறான். எட்டுநாட்கள் வம்சதாரா வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
மழைப்புயல்களின் நாடாகிய கலிங்கத்தின் தென்கிழக்கு பருவமழை ஒன்றின் சித்திரமும் வருகிறது. மழைப்புயலை அங்கு காளி என்றே சொல்கிறார்கள். பெருமழை வரும் என்று பறவைகள் கூட்டம்கூட்டமாக கடலில் இருந்து கரைநோக்கிவந்துகொண்டிருப்பதை இளநாகன் காண்கிறான். நதிநீரில் தெரிந்த உருளைக்கல் பரப்பில் ஆமைகள் கரைநோக்கிச் செல்வதையும் காண்கிறான். கரைமுழுக்க கூழாங்கல்சரிவு போல ஆமைகள் கடலில் இருந்து வருகின்றன. அறாத சரடெனப் பொழிகிறது பெருமழை. மழைநீர் கொப்பளித்து வழிந்த படிக்கட்டுகள் வழியாகச் சென்று இடிந்து கிடப்பது போன்ற நகரைப் பார்க்கிறான். சாலைகளில் பேராறுபோல முழங்கால்வரை செந்நீர் வழிந்தோடுகிறது. நீர்த்திரையை விலக்கி நடந்து சத்திரத்தை அடைந்து பனைவெல்லமிட்ட கொதிக்கும் தினைக்கஞ்சியை உண்கிறார்கள்.
கலிங்கபுரியில் இருந்து படகில் கிளம்பி ருஷிகுல்ய நதிக்கரையில் இருந்த துறைநகரமான மணிபுரம் சென்று அங்கிருந்து வண்டிச்சாலையில் சிற்றூர்கள் வழியாக பயணம்செய்து சிலிகை(சில்கா) ஏரிக்கரையை அடைகின்றனர்.
ருஷிகுல்யா என்ற இந்நதி தரிங்படி எனும் இடத்தில் உற்பத்தியாகி ஒரிசாவின் கந்தமால், கஞ்சம் பகுதியில் கடல் சேர்கிறது. திசைநிறைத்துக்கிடந்த சிலிகையில் படகிலேறிப் பயணம் செய்யும் இளநாகன் சிலிகையின் மேல் நாணல் அடர்ந்த சிறிய தீவுகளில் வெண்காளான் பூத்ததுபோல நாரைகளும் கொக்குகளும் சூழ்ந்து நிற்பதைப் பார்க்கிறான்.
கலிங்கநாட்டின் தலைநகரமான சிசுபாலபுரி ஏரியின் வட எல்லையில் உள்ளது. முன்பு அது மேற்கே தயை நதியின் கரையில் இருந்தது என்று அறிகிறான். இன்றைய புபனேஸ்வருக்கு அருகே சிசுபால்கர் என்ற இடத்தில் இத்தொல்நகரத்தின் எச்சங்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
கதிரெழுநகர்
சிலிகையில் இருந்து தயை ஆறு வழியாகச் சென்று மகாநதியை அடைந்து அங்கிருந்து கலிங்கக் கடலோரமாக இருந்த ஆலயநகரமான அர்க்கபுரிக்கு(கோனார்க்) அருணரும் இளநாகனும் செல்கின்றனர். கடற்காற்று சுழன்று வீசிக்கொண்டிருக்கும் சிறுநகர். கருங்கற்களால் கட்டப்பட்ட உயரமற்ற சுவர்களின்மேல் கற்பலகைகளைக் கூரையாக்கி எழுப்பப்பட்ட வீடுகள். கற்பாதையின்மேல் மணல் கடற்காற்றில் ஆவியெழுவதுபோல சுழன்று பறக்க . கற்களில்லாத நிலம் முழுக்க மணலே தெரிகிறது.
விஷுவ ராசியில் சூரியன் நுழையும் முதல் நாளில் அர்க்கபுரிக்குச் சென்று அங்குள்ள செங்கதிரோன் ஆலயத்தில் கடல்நீராடி வழிபட்டு மீள்வதை மக்கள் நெறியாகக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். மகாநதியில் பெரிய படகுகளில் கிராமத்தினர் நிறைந்து சூரியனின் முதல்கதிர் எழும் அர்க்கபுரிக்கு செல்கின்றனர். மணல்மேட்டில் ஏறியதும் பெரிய சக்கரங்களுடன் ரதவடிவில் அமைக்கப்பட்டிருந்த சூரியனின் செங்கல்கோயில் தெரிகிறது. இது அன்றைய கோனார்க் சூரியக் கோவிலின் சித்திரம்:
“கடலுக்கு புறம்காட்டி ஓங்கி நின்றிருந்த பேராலயத்தின் சிறிய மதில்சுவர் வாயிலில் கலிங்கமன்னர்களின் இலச்சினையாகிய கால்தூக்கிய சிம்மங்கள் இருபக்கமும் எழுந்து நின்றன. வாயிலின் கற்கதவம் புது மாந்தளிர்களாலும் கொன்றை மலர்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. உள்ளே பன்னிரு ஆரங்கள் கொண்ட ஆலயத்தேரின் சக்கரங்களுக்கும் செஞ்சந்தனமும் மஞ்சளும் பூசப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டிருந்தது.” – (வண்ணக்கடல் – 49)
கதிரெழுநகராகிய அர்க்கபுரியைத் தொடர்ந்து கதிரோன் மைந்தன் வளரும் சம்பாபுரி(பீகாரில் சம்பா நதிக்கரையில்) அறிமுகமாகிறது.
பொன்னகரம்
காட்டின் வழி பயணம் செய்து ஆசுரநாட்டுக்கான பயணத்தில் இளநாகன் பூரணர் எனும் சூதரை சந்திக்கிறான். மகாபலி ஆண்ட மண் என்றறியப்படும் ஆசுர நாட்டின் தலைநகரான மகோதயபுரம் இருந்த ரிக்ஷக மலையிலும் அதைச்சுற்றிய காடுகளிலுமாக நூற்றெட்டு மலைக்குடிகள் வாழ்வதை அறிகிறான். அந்த வனத்தையே மகாபலியாக அக்குடிகள் உருவகிக்கிறார்கள். சூதர்கள் உடன் வர, அஹோரம் என்னும் மலைக்கிராமத்தைச் சென்றடைகிறார்கள். தோலாடைகளும் கல்மாலைகளும் அணிந்து, உடலெங்கும் நீறுபூசி, நெற்றியில் முக்கண் வரைந்த மலைக்குடிமக்கள் ஆசுரமொழியில் அவர்களிடம் பேசுகிறார்கள். சூதர்கள் மற்றும் பாணர்கள் வழியாகவே வெளியுலகு மக்களை சென்றடைந்ததால் சூதர்களுக்கு செல்லுமிடமெங்கும் வரவேற்பு இருப்பதையும் உணர முடிகிறது.
அக்குடியினர் வாழ்ந்த அனைத்துக் குடில்கழும் மரங்களுக்குமேல் அமைந்திருக்கின்றன. வீடுகளை இணைத்து கயிற்றுப்பாலங்கள் வானத்துத் தெருக்களென தோன்றுகின்றன. செம்மறியாடுகளை மேய்ச்சலுக்குப் பிறகு கயிற்றால் இழுத்து மேலேற்றி மரங்களுக்குமேல் அமைக்கப்பட்டிருந்த தொழுவங்களில் அடைகின்றனர். குடில்களுக்குக் கீழே தைலப்புற்களை அடுக்கிப் புகையிடுகின்றனர்.
ஆசுர வனதேசத்தின் தலைநகரமான ஹிரண்மயம் குறித்து வனக்குடித்தலைவர் சொல்ல அறிந்து, மலைப்பாறைகளிலும் ஓடைகளிலும் மரங்களிலும் அவர் சொன்ன அடையாளம் கண்டு, ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் செல்கிறான். பாறைகளில் அறைந்து நுரையெழுப்பிச் சென்றுகொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக நாணல்கள் அடர்ந்த சதுப்பை ஒட்டி வடக்கு நோக்கிச் ஏழுநாட்கள் நடந்து அடர்காட்டின் செறிவினால் முற்றிலும் தடுக்கப்பட்டு நிற்கிறார்கள். கரைமுதலைகள் நிறைந்த அந்த ஆற்றில் ஒரு படகு வர, பாறைமேல் ஏறி சம்பர் எனும் பழங்குடித் தலைவர் ஒருவருடன் பயணம் தொடர்கிறது. நீருக்குள் வளர்ந்துள்ள நீர்க்கொடிகள், கரையெங்கும் முதலைகளும் பாறைகளும் என்று மிக ஆபத்தான நீர் வழிப் பயணம். கிடைமட்டமாக விழும் அருவி எனத் தோன்றச்செய்யும் நீரோட்டம். படகிலிருந்து நதிக்குள் இறங்கி கூந்தலை நீரிலாடவிட்டு நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் கொடிகளைப்பற்றி கிளையில் ஏறி மரத்தின் வழியாகச் சென்று உலர்ந்த நிலத்தில் இறங்கி, அடர்ந்த புதர்களை கத்தியால் வெட்டி வழி செய்து பயணத்தைத் தொடர்கிறார்கள். காடு முழுக்க நீராவி நிறைந்து, தவளைக்கூச்சல் செறிந்து, பச்சைப்பாம்புகளும் செவ்வண்ணத்தவளைகளும் ஆங்காங்கே கண்ணில் பட கனமழையினூடாக ஹிரண்மயம் சென்று சேர்கிறார்கள்.
ஹிரண்மயம் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் ஆண்ட, மயன் உருவாக்கிய பெருநகர் என்ற தொன்மம் அப்பகுதியில் இருக்கிறது, அதன் மிச்சங்கள் கானகத்துள் சொட்டும் மரங்கள் செறிந்த பசுமைக்குள் பலமடங்கு பேருருக் கொண்ட கட்டிடங்களின் நினைவுகள் போல சிதறிக் கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான பெருந்தூண்களுக்கு நடுவே பிரம்மாண்டமான கற்பலகைகள், உத்தரங்கள் பாதிமண்ணில் புதைந்து பரவிக் கிடக்கின்றன.அந்தப்பெருங்கனவு அவனை மூச்சுத்திணறச் செய்கிறது. மஞ்சள்பாறைகளினால் ஆன நகர் என்பதால் பொன்னகரம் என்ற பொருளில் ஹிரண்மயம் என அழைக்கப்பட்டிருக்கிறது. ஹிரண்யசிருங்கம் என்னும் மஞ்சள் பாறைகளாலான மலைத்தொடரைக் குடைந்தெடுத்து அந்நகரை உருவாக்கியிருக்கிறார்கள். பெரிய மாளிகை இடிபாட்டின் மறுபக்கம் காடு மேலும் அடர்ந்திருக்கிறது.அங்கே பழங்குடிகள் வணங்கும் சிறு ஆலயம் இருக்கிறது. அங்கிருந்து மீண்டும் படகில் ஹிரண்யபதம் என்னும் ஏகலைவனின் நகருக்கு சென்று சேர்கிறான் இளநாகன்.
மண்நகரம்
அங்கிருந்து இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின்(சம்பல் நதியின் பழைய பெயர்) கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு செல்கிறான். சேறுநுரைத்த ஆற்றைக்கடந்து சூக்திமதிக்கரையின் காடுகளில் அமைந்த வால்மீக நாட்டை முதலில் அடைந்து . அங்கிருந்து இளநாகன் காடுகள் வழியாக வடமேற்காகப் பயணம் செய்து வேத்ராவதியின் பெருக்கைக் கடந்து அடர்காடுகள் வழியாகச் சென்று சர்மாவதியின் சதுப்புச் சமவெளி நோக்கிச் செல்கிறான். மண்ணாலானது என்ற பொருள் கொண்ட மிருத்திகாவதி மண்ணாலேயே கட்டப்பட்டிருக்கிறது. கூரைகளும் மண்பாளங்களால் ஆனவை, மண் நிறம் கொண்ட மக்களனைவரும் மண்படிந்த மரவுரிகளே அணிந்து மண் நகரமாகவே திகழ்கிறது.
நிஷாதநாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே என்று காண்கிறான். ஒவ்வொரு நாளும் ஆயிரம் படகுகள் தோல்பொதிகளுடன் சர்மாவதி வழியாக கங்கையைச் சென்றடைகின்றன என்றாலும் கங்காவர்த்தம் முழுக்க அணியப்படும் மரவுரியில் பெரும்பகுதி நிஷாத நாட்டிலிருந்தே செல்கிறது என்றாலும் அங்கே செல்வமேதும் சேரவில்லை என்பதும் விளங்குகிறது.
முழங்கால்வரை புதையும் மழைச்சேறுமண்டிய மிருத்திகாவதியை அணுகும் சாலைகளில் எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகள் மட்டுமே செல்கின்றன. அங்கே அஸ்தினபுரத்தவளான ஒரு பெண்ணை சந்திக்கிறான். தொல்மதுரை மூதூரிலிருந்து கிளம்பி தமிழ்நிலமும் திருவிடமும் வேசரமும் கலிங்கமும் கடந்து ஆசுரமும் நிஷாதமும் கண்டு அவன் தேடிய அஸ்தினபுரியை சென்றடைகிறான்.
இளநாகனது பயணத்தில் பல்வேறு சூதர்களை, படிவர்களை சந்திக்கிறான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சிந்தனை முறை விவாதிக்கப்படுகிறது. மூதூர் மதுரையில் இசைச்சூதர்கள் முதல்முடிவில்லாத பிரம்மம் தொடங்கி விண்ணளந்த பெருமானின் புகழைக் களியாட்டாகப் பாடுகிறார்கள். புகாரில் சதுக்கப்பூதம் வரும் இப்பகுதியில் சாங்கியத்தின் சத்காரியவாதம் குறித்து முதுசூதர் கூறுகிறார். சாங்கியத்தின் அன்னமந்திரம் ஓதி பூதத்தை வணங்குகின்றனர். கலை திகழும் காஞ்சியில் தார்க்கிகம் விவரிக்கப்படுகிறது. காளஹஸ்தியில் சிவப்படிவர்கள் வழியாக காளாமுகம், ஒவ்வொன்றாய்த் துறந்து சென்று வெறுமையின் பெருங்களியை ஏந்தி நிற்கும் ஆதிசைவம் அறிமுகமாகிறது. விஜயபுரியில் அருகப் படிவர்கள் ஐவருக்கு பூசை நிகழ்கிறது, அருக ஞானத்தை உரைக்கிறார் ஓர் அருகப்படிவர். ராஜமகேந்திரபுரியில் தனுர்வேதம். நீர்த்துமிகள் காற்றில் நிறைந்திருந்த கலிங்கபுரியில் வைசேடிக மெய்யியல் விவாதிக்கிறார் ஒரு வைசேடிகர். அர்க்கபுரியில் வரும்போது செங்கதிரோன் வழிபாடு, அதிலிருந்து அங்கம் செல்கிறான் - சௌரத்தின் நிலங்கள். அதிலிருந்து மஹுவாக்கள்ளின் பித்தைப் பாடும் சூதரோடு அசுர நிலங்கள் நோக்கிய பயணம். மகாபலியையும், ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவையும் பேசியபடி பொன்னையும் மண்ணையும் ஆண்ட ஆசுர நிலங்களைக் கடக்கிறான். அந்தந்த மெய்மைக்கு ஏற்றவாறு துணைக்கதைகளும் அதிலிருந்து அஸ்தினபுரியின் கதையும் என பின்னிப்பிணைந்து சொல்கிறது வண்ணக்கடல்.
மகாபாரதத்தின் மையத்தை நோக்கி பாதைகளும் கதைகளும் மாந்தர்களும் ஊழும் நகரும் கதையே வண்ணக்கடல். இளநாகன் விழிகளில் வண்ணம் செறிந்த பாரத நிலம் முழுவதும் கடல் என விரியும் விரிவே வண்ணக்கடல்.
- மேலும்
Comments