கிழக்கு நோக்கி - 1
- இளம்பரிதி
- Feb 14, 2024
- 7 min read
Updated: Feb 15, 2024
சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.
" இந்த எட்டு வருடத்தில் நமது அதிகபட்ச உரையாடல் பயணம் என்ற ஒற்றை துதிப்பாடலாகவே இருந்துள்ளது என்பதை எண்ணும்போதே, நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீளத் துவங்கி விடுகிறது அல்லவா "
2018ல் இருபத்தி ஏழாயிரம் கிலோமீட்டர் பைக் பயணத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் அலைந்திருந்தேன். அதே பயணத்தில் நேபாளத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் புத்தர் பிறந்த ஊரான லும்பினியில் துவங்கி தென்கிழக்கு பகுதியான பனிடங்கி வரை , நேபாளின் ஏழு மாநிலங்களையும் பைக்கிலேயே கடந்து வந்தேன். மேலும் சுவாரசியமான விடயம் ஒன்று உண்டு, நேபாளத்திலிருந்து வெளியே வந்த அதே தினத்தில் பூட்டான் சென்றேன், ஒரே நாளில் நேபாளம், இந்தியா, பூட்டான் என மூன்று தேசங்களின் ஊடாகவும் சென்றேன். இந்தக் கணம் எண்ணிப்பார்க்கையில் எந்த ஊக்கத்தில் அவ்வாறு பயணித்தேன் என திகைப்பாக உள்ளது.
அப்பயணத்திற்கு பின் நீண்ட பயணம் 2021 இல் வாய்த்தது, டேராடூனிலிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் பஞ்சபிரயாகை, கேதாரம், பத்ரிநாத், நந்தா தேவி, மலர்களின் பள்ளதாக்கு என பதினைந்து நாட்கள், அது ஒரு நீண்ட இமையக்கனவு. 2022 ஆம் ஆண்டு எங்கள் திருமணத்திற்குபின் பெரிய சாகச பயணங்கள் எதுவும் இல்லை, திருமணமே நானும் நிக்கிதாவும் செய்த பெரிய சாகசமாக இருந்தது.
ஜப்பான் பயணம் எங்கள் நீண்ட நாள் அவா, அதற்காகவே தனியான சேமிப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களிடம் இருந்தது. வீட்டில் இருக்கும் திருப்பதி உண்டியலில் சில்லறைகளை சேர்ப்பதைப் போல, இருவருக்குமான பொது வங்கிகணக்கு ஒன்றில் ஜப்பானிய யென்களுக்கு நிகரான இந்திய ரூபாய்களை சேர்த்துவைக்கத் துவங்கியிருந்தோம். 2023 புத்தாண்டில் அந்த வருடம் செல்லவேண்டிய நகர்களையும், தேசங்களையும் பற்றி நானும் நிக்கிதாவும் பட்டியலிட்டோம், இருவருமே ஒரு சேர ஆமோதித்து முடிவு செய்த தேசம் ஜப்பான். அன்றிலிருந்து பயணம் முடியும் வரை பத்து மாதங்கள் பயணத்திற்கான தயாரிப்புகள் தொடர்ந்தன. எதையுமே வாசிக்காமல் புதிய தேசத்திற்கு பயணிக்க முடியாதா என்ன? ஜப்பான் போன்ற ஓர் தேசத்திற்கு எந்தவித அடிப்படை தயாரிப்பும் இல்லாமல் செல்வது நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்பவர்களுக்கு மட்டும் உதவக்கூடியது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் கலாச்சார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் செழுமையுடையவை, நிறைவில்லாமல் நடைபெறும் திருவிழாக்களுக்கு நிகரான காட்சிகள் அங்கே எப்போதும் வியாபித்து இருப்பவை. காற்றின் திசையில் பயணிக்கும் பாய்மரக்கப்பலுக்கு கூட புறப்பாடு எந்தத் திசையிலிருந்து துவங்கவேண்டும் என்பதற்கு ஓர் திசைமானி தேவை, அதுபோல பயணித்திற்கான தயாரிப்புகள் நாங்கள் செல்லவேண்டிய திசையை சரியாய் அமைத்துக் கொடுத்தன.
எங்கள் முந்தைய பயணங்களைப் போலவே சாகசங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஓர் பயணமாக இது அமையவேண்டும் என எண்ணி பல திட்டங்கள் தயார் செய்தோம். எங்களின் முந்தைய பயணங்களை போல் அல்லாமல் இந்தப் பயணம் சற்று வித்தியாசமானது, எங்களுடன் சேர்த்து ஏழுபேர் குழு ஒன்று உருவாகியது, ஏழுபேரும் வேவ்வேறு துறைகளில் உழல்பவர்கள்.
நானும் நிக்கிதாவும் இந்தக் குழுவின் பயண வழிகாட்டிகள், நிக்கிதாவின் தங்கை சாரோன் களிமண் பொருட்களை செய்யும் கைவினைக் கலைஞர், உலகியலில் அதிகம் பற்று கொண்டவர். என் அத்தை மகன் பச்சையப்பன் (எ) பச்சை, பத்துக்கும் மேற்பட்ட தொழில் செய்து அதில் பல கோடிகள் நஷ்டங்களை சந்தித்து இன்று இயற்கை விவசாயம் செய்யத் துவங்கியுள்ளார். பெங்களூரில் என்னுடன் பணிபுரிந்த நண்பன் ஜெரின் ஆடை வடிவமைப்பாளன், தேர்ந்த ஓவியன். லே பயணத்தில் என் உற்ற நண்பரான ஜார்ஜ் கேரளத்தில் பழதோட்ட விவசாயி, துபாயில் அவர் செய்துவந்த கணக்கர் பணியை துறந்து விருப்பத்தின் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் பழ விவசாயகள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தொழில் புரிகிறார் , அவரின் மனைவி அன்ஸிலி (எ) அம்மூ, தொடுபுழாவில் ஜார்ஜின் குடும்பம் நடத்தும் விடுதியின் மேற்பார்வையாளராகவும், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிகிறார்.
இந்த ஏழு பேர் கொண்ட குழு அமைந்ததே ஓர் சுவாரஸ்யமான கதை நானும் நிக்கிதாவும் திருமணத்திற்கு பின் தேன்நிலவு செல்ல திட்டமிடவில்லை கல்யாண கடன்களிலிருந்து மீளவே ஒரு வருடம் ஆகும் என்பதை அறிந்து ஒத்தி போட்டோம். ஜார்ஜ் எங்கள் கல்யாணப் பரிசாய் அவர் விடுதியில் ஒரு மாதம் தாங்கிக்கொள்ள அழைத்தார். அங்கே சென்றதும், ஜார்ஜ், அம்மூ, நிக்கிதா, நான் என நால்வரும் கேரளத்தில் உள்ள தலங்களுக்கு பயணம் செய்தோம், பெரியபயணம் ஒன்றை இணைந்து திட்டமிடவேண்டும் என நால்வரும் உறுதிபூண்டோம். அதன் வெளிப்பாடு எங்கள் ஜப்பான் பயணத்தில் ஜார்ஜும், அம்முவும் இணைந்தது. சாரோன், நிக்கிதாவின் மீது அதீத சார்பு கொண்ட தங்கை, தன் அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதையே பலநாட்கள் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் தன்னை தன் அக்கா தான் வெளிநாடுகளுக்கு சுற்றி காண்பிக்க கூட்டி செல்லவேண்டும் என அடம்பிடிக்கத் துவங்கி பிடிவாதமாய் எங்கள் பயணத்தில் இணைந்து கொண்டாள். பச்சை அண்ணன் கடந்த இருபது வருடங்களாய் எடுத்த எல்லா முயற்களும் தோல்வியில் முடிந்து கொண்டே இருந்தது, திருமணம் எவ்வளவு முயன்றும் கைகூடவில்லை. வருமானத்திற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டிருந்த சோர்வான காலத்தில் சிக்கி இருந்தார். சிலநாட்கள் புது நிலங்களை கண்டு வந்தால் அவரால் மீள முடியும் என எண்ணி நான் அவரை எங்களுடன் இணைத்துக்கொண்டேன். என் நண்பன் ஜெரின் நட்புக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவன். பிறருக்காக எந்த உதவியும் எந்த நேரத்திலும் செய்யும் மனம் கொண்டவன். ஜப்பானின் மாங்கா கார்ட்டூன்களை விரும்பிப் பார்த்து அதில் வரும் ஜப்பானில் அதிகம் வாழ்பவன், மேலும் ஜப்பானிய பாணி உடைகளையும், அலங்காரங்களையும் செய்துகொள்பவன். அவன் வசிக்கவேண்டிய நிலம் ஜப்பான் என்பதை அவன் பதின்பருவத்திலியே முடிவு செய்துவிட்டதை என்னிடம் தெரிவித்தான், என் ஜப்பான் பயண திட்டம் அறிந்ததும் என்னுடன் இணைந்து கொண்டான். என் தம்பி மருத்துவர் செழியனுக்கு இந்த பயணத்தில் இணைந்துகொள்ள மிகுந்த விருப்பம் இருந்தது, அலுவல் காரணமாக அவரால் இணைய இயலவில்லை, அது எங்கள் அனைவர்க்கும் ஒரு இழப்பே.
இந்த ஏழு பேர் கூட்டத்தில் நான், நிக்கிதா, ஜார்ஜ் ஆகிய மூவரும் மட்டும் தான் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள், அதனால் நாங்கள் ஜப்பானை வெவ்வேறு கோணங்களில் அணுக முயற்சிதோம், மீதி நால்வரும் கண்களாகவும், செவிகளாகவும் மட்டுமே பயணம் முழுவதும் எஞ்ச விரும்பினர்.
அக்டோபர் மாதம் முதல் வாரம் துவங்கி இறுதி வாரம் வரை இருபத்தி நான்கு நாட்கள் நீண்ட நான்கு கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய பயணம். சிங்கப்பூர் துவங்கி, வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.
எந்த விதிமுறையும் இல்லாமல் சுற்றி திரியம் என் இயல்பிலிருந்து இந்த பயணம் சற்று வேறுபடுகிறது, தீவிர வாசிப்பும் திட்டமிடலுக்கு பின் இந்த பயணத்தை நானும் நிக்கிதாவும் வடிவமைத்தோம். சிங்கப்பூரில் ஆர்க்கிட் கார்டன், ஹோசிமின் நகரத்தில் வியட்நாம் போரில் இராணுவப் பதுங்கு குழிகளாக செயல்பட்ட இடம், ஜப்பானின் காமகுரா பகுதியில் உள்ள ஐந்து ஜென் ஆலயங்கள், பிஜி மலையை சுற்றி இருக்கும் ஐந்து முக்கிய ஏரிகள், கியோட்டோவில் உள்ள ஐந்து ஜென் பூங்காக்கள், குமோனோ கோடோ எனப்படும் நூறு ஷிண்டோ கோவில்களை சுற்றி முப்பது மைல் பாதயாத்திரை, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் என நான்கு தேசங்களின் முக்கிய இடங்களை உள்ளடக்கிய பயணம்.
தேதிகள் முடிவு செய்வது, பயணசீட்டுகள் முன் பதிவு, விசா வாங்குவது, விடுதிகளை தேர்ந்தெடுப்பது, உணவுப்பட்டியலை தயார் செய்வது, அந்நிய செலாவணி மாற்றம் செய்வது, பார்க்க வேண்டிய இடங்கள், சாதிக்க வேண்டிய அனுபவங்களை தீர்மானிப்பது என சகலத்தையும் நானும் நிக்கிதாவும் மட்டுமே பார்த்துக் கொண்டோம். இது நானும் நிக்கிதாவும் இணைந்து செய்யும் முதல் அயல்நாட்டுப் பயணம் என்பதால் அயல்நாட்டு நுழைவுச்சான்றுகள் வாங்குவதற்கு பெரிய சிரமங்களை சந்தித்தோம், அலுவலகத்தில் என் வேலைபளு கடுமையாக இருந்ததால் விசா அலுவலகத்திற்கு தினமும் நிக்கிதாவே சென்று வந்தார். இந்தப் பயணம் எங்கள் ஆறு பேருக்கும் சாத்தியமானதற்கு நிக்கிதாவே முழுமுதற் காரணம்.
அந்நியநாட்டுப் பயணம் சரியாக துவங்குவதற்கு பல சிக்கல்களை நாங்கள் கடக்க வேண்டி இருந்தது . அதில் பிரதானமானவைகள் ,
1) பயணச்சீட்டுகள்
ரயில் சீட்டுகளை பதிவு செய்வது போல விமான சீட்டுகளை பதிவு செய்வதும் சுலபமான பணி தான், ஆனால் எங்கள் விமானப் பயணம் ஒரு இடத்தில் துவங்கி மற்றொரு இடத்தில முடிவது மட்டும் இல்லை ஒரு தேசத்தில் ஏறி, வேறு ஒரு தேசத்தில் தங்கி, வேறு ஒரு தேசத்தை நோக்கி பயணிப்பது. ஏழு பேருக்கும் ஒரே விமானத்தில் ஒரே பாதையில் விமானம் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே இலக்கு. ஆனால் அப்படி அமையவில்லை. நாங்கள் நான்கு தேசங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயமும் பயணச்சீட்டுகளின் அதீத விலையினாலும், ஏழு சீட்டுகள் ஒன்றாக கிடைக்காததினாலும் நிகழ்ந்த விளைவு.
முதலில் சென்னையிலிருந்து டோக்கியோவிற்கு பயணச்சீட்டு தேடியதில் ஒரு வழிப்பயணத்திற்கு மட்டும் நாற்பதாயிரம் வரை வந்தது, மேலும் பதினாறு மணிநேர விமான பயணத்தில் சிங்கப்பூரில் நான்கு மணிநேரம் காத்திருப்பு இருந்தது. சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று அங்கு இரண்டு நாள் தங்கி டோக்கியா சென்றால் விமானக் கட்டணத்தில் பத்தாயிரம் வரை மிச்சம் செய்யமுடியும் எனத் தெரிந்தது. இப்படியே ஆராய்ச்சி செய்ததில் விமானத்தடம் பற்றி அறிந்து கொண்டேன். சிங்கப்பூரிலிருந்து வியட்னாம் மார்க்கமாக டோக்கியோவிற்கு விமானசேவை இருந்ததால் அதையே தேர்ந்தெடுத்தேன். ஒரு வழிப்பயணத்திற்கு முப்பதாயிரம் வரை ஆனது, இரண்டு தேசங்களை கூடுதலாக காண வாய்ப்பு அமைந்தது. இதே யுத்தியை டோக்கியோவிலிருந்து சென்னை திரும்பும் பயணத்திலும் பயன்படுத்தி கோலாலம்பூர் செல்ல பயணச்சீட்டுகளை வாங்கினோம். அக்டோபரில் செல்ல திட்டமிட்ட பயணத்திற்கு மே மாதமே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துவிட்டோம். இதனாலும் கொஞ்சம் சேமிக்க முடிந்தது.
2) ஆவண சரிபார்ப்புகள் :
உள்நாட்டு பயணங்களை திட்டமிடும் போது இல்லாத ஒரு சுமை சர்வதேச பயணங்கள் செய்யும்போது கூடிவிடுகிறது, நம்மை நாமே உற்றுநோக்கும் சுமை அது. பயணம் கிளம்பும் வரை நம் வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது, வாங்கிய கடன்களுக்கு சரியாக வட்டிகளை கட்டியுள்ளோமா, வருவாய் துறைக்கு கட்டவேண்டிய கப்பங்கள் எல்லாம் சரியாய் செலுத்திவிட்டோமோ, நம் கடவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் தான் வசிக்கிறோமா, உண்மையிலேயே நாம் கல்லூரி சென்று படித்து பட்டம் பெற்றோமா என நாம் எதையெல்லாம் நம்மை பற்றி மறக்க நினைக்கிறோமோ அவை எல்லாவற்றையும் உறுதி செய்து அதற்கான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், இவை எல்லாம் இருந்தால் மட்டுமே அயல்நாட்டு நுழைவுச்சான்றுகளைப் (விசா) பெற இயலும். எனக்கும் நிக்கிதாவிற்கும் பெரும்பாலான ஆவணங்கள் சரியாய் இருந்தன. ஜார்ஜ்க்கும், பச்சை அண்ணனுக்கும், சாரோனுக்கும் சொந்த தொழில் செய்வதற்கான ஆவணங்களையும், வருவாய் சான்றுகளையும் புதுப்பிக்க வேண்டியிருந்தது, ஜெரினுக்கு வசிப்பிட முகவரியில் சிக்கல், இவை எல்லாவற்றையும் களைவதற்கான ஆலோசனையும், திட்டமிடலும் நானும் நிக்கிதாவும் செய்யவேண்டி இருந்தது.
3) நுழைவுச்சான்றுகள் :
ஒவ்வொரு தேசத்திற்கும் சட்ட திட்டங்கள் மாறுவதால் பல்வேறு விதத்தில் படிவங்களை நிரப்புவது முக்கியமானது, நாங்கள் ஒரே நேரத்தில் நான்கு தேசங்களுக்கு பயணிப்பதால் நான்கு வேவ்வேறு அளவுகளில் புகைப்படங்கள் எடுக்கவேண்டி இருந்தது. பெரும் சிக்கல் என்னவெனில் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையாக நடைமுறையில் இல்லை, உதாரணமாக ஜப்பான் நுழைவுச் சான்று வைத்திருக்கும் இந்தியர் 96 மணிநேரம் சிங்கப்பூரை நுழைவுச் சான்று இல்லாமல் சுற்றி பார்க்க இயலும் என்பது அரசாணையில் உள்ளது.
விசாரித்ததில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருக்கும் அதிகாரியின் இறுதி முடிவிற்கு அந்த அரசாணை உட்பட்டது எனத் தூதரகம் பதில் அளித்தது. ஆகையினால் நான்கு தூதரகத்தில் விண்ணப்பித்து விசாக்களைப் பெற வேண்டி இருந்தது, ஒரு நபருக்கு நான்கு விசாக்கள் என மொத்தம் ஏழு பேருக்கும் சேர்த்து இருபத்தி எட்டு விசாக்கள். எங்கள் விஷயத்தில் நான், நிக்கிதா, பச்சை அண்ணன் மட்டும் சென்னையில் வசித்தோம். மீதி நால்வரும் வேறு ஊர்களில் வசித்ததால் அவர்களின் அசல், நகல் கடவுச்சீட்டுகளை சேகரித்து அதை பத்திரப்படுத்தி சென்னையில் உள்ள தூதரகத்தில் சேர்த்து மீண்டு அதைப் பெற்று சம்பந்தபட்டவரிடம் ஒப்படைப்பது வரை பெரும் அலைச்சல். இந்தப் பணிகளை முழுமையாக எடுத்து முடித்தது நிக்கிதா.
4) அந்நிய செலாவணி :
வெளிதேசங்களுக்கு பயணிக்கையில் அந்த தேசத்தின் காசுக்கு நிகராக நம் நாட்டு ரூபாயை மாற்ற வேண்டும். இது மிகவும் குழம்பச் செய்யும் ஓர் விளையாட்டு, காசைக் கொடுத்து காசை வாங்குவது அது. நூறுரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குகிறோம் என வைத்துக்கொள்வோம் அதன் உண்மை மதிப்பு எழுபது ரூபாயாக இருக்கும், மீதி முப்பது விற்பவருக்கு இலாபம் அதே போல் தான் காசை மாற்றுவதும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் மாற்றும் நிலையங்களில் முப்பது சதவீதம் வரை கமிஷன் தொகை செலுத்தவேண்டி இருக்கும் அதாவது ஆயிரம் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர்கள் வாங்க நினைத்தால் எழுநூறு ரூபாய்க்கு நிகரான டாலர்களே கையில் கிடைக்கும். நூறு வருடங்களுக்கு முன் பயணம் செய்த கருப்பன் செட்டியாருக்கு இதே சிக்கல், செலாவணி மாற்றுவதை "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை" என அவர் குறிப்பிடுகிறார். தெரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து அந்நிய செலாவணி வாங்கியதில் வழக்கமாக ஆகும் செலவை விட எங்களால் இருபது சதவீதம் வரை சேமிக்க முடிந்தது. மேலும் அதிக பணத்தையும் கையில் சுமக்க முடியாது என்பதனால் வெளிநாடுகளில் பயன்படும் விதம் வங்கிக்கணக்குகளை துவங்கி, டெபிட் கார்டுகள் வாங்கிக்கொண்டோம்.
5) தங்கும் இடம் :
பொதுவாகவே நாம் அன்றாடம் செய்யும் செலவீனங்களை விட பயணத்தில் அதிகம் செலவாகும், தங்குமிட செலவுகள் மட்டும் நான்கில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளும். அதே போல் பயணத்தில் பணத்தை மிச்சம் செய்ய தங்கும் இடத்திற்கான செலவுகளை குறைத்துக்கொள்வதே ஒரே வழி, செல்லும் இடமெல்லாம் நல்ல நண்பர்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
நாங்கள் செய்த புண்ணியம் கவிஞர் குறிஞ்சி பிரபா எங்களுக்கு நண்பராக அமைந்தது, அவரின் மாமா குறிஞ்சி செல்வன் ஜப்பானில் நிரந்தரமாக வசிக்கிறார், விருந்தோம்பலின் அடையாளம் என அவரைக் குறிப்பிடலாம், அவரின் உதவியால் டோக்கியோவில் எங்களுக்கென ஓர் சொந்த வீட்டின் உபசரிப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் தங்கும் இடம் எதுவும் பதிவு செய்யவில்லை, வியட்னாமில் மலிவு விலை விடுதி ஒன்று அமைந்தது, மலேசியாவிலும் அவ்வாறே ஓர் விடுதி கிடைத்தது, தங்கும் விடுதிகளை முடிந்த அளவிற்கு பயணம் துவங்குவதற்கு முன்னமே திட்டமிட்டு விட்டோம். பெயர் தெரியாத ஊர்களில், புகைப்படம் கூட பார்க்காமல் கடவுளின் மேல் பாரத்தை போட்டு சில விடுதிகள் முன் பதிவு செய்தாள் நிக்கிதா. அவள் ராசி எல்லோருக்கும் எல்லாம் சுகமாகவே அமைந்தது.
எந்த பயணமும் நிறைவானதாய் அமைவதற்கு தடைகளை கடப்பது மட்டும் போதாது, ஆசிர்வாதமும் முழுமையாய் நம்முடன் இருக்கவேண்டும். எங்கள் பயணத்தை சிறப்பாய் அமைத்தது எங்கள் குடும்பத்தினரின் ஆதரவும் , என் நண்பர்களின் ஆசிர்வாதமும் மட்டுமே. என் சகோதரர் எழுத்தாளர் அகரமுதல்வன், எங்கள் யோக குடும்ப நண்பர்கள் சுபஸ்ரீ, மாரிராஜ், கவிதா, எங்கள் குருஜி சௌந்தர், எங்கள் அண்ணன் கப்பல்காரன் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் பல கட்டங்களில் எங்களுக்கான உதவிகளை செய்து கொடுத்தனர். சிங்கப்பூரில் எழுத்தாளர் சுநீல் கிருஷ்ணனும் , டோக்கியோவில் ரா.செந்தில் குமார் அண்ணனும், “வழி” இதழின் வாசகர் முத்துவும் எங்களை ஏந்திக்கொண்டனர். ஆசான் ஜெயமோகனின் சொற்கள் எங்களை வழிநடத்தி உடன் வந்தது.
முதல் நாள் இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு நான், நிக்கி, சாரோன் சென்னை விமான நிலையம் அடைந்த ஐந்து நிமிடத்துக்கெல்லாம் பச்சை அண்னன் வந்து சேர்ந்தார். போர்டிங் பாஸ் பெற்று காத்திருந்த சமையத்தில் ஜார்ஜும் அம்முவும் வந்தனர், ஜெரின் பெங்களூருவிலிருந்து நேரே சிங்கப்பூருக்கு வருவதாய் திட்டம். சாரோனும், பச்சை அண்ணனும் ஜார்ஜை முன்னர் அறிந்திருக்கவில்லை. எல்லா அறிமுகமும் முடிந்ததும், பாதுகாப்பு சோதனை முடித்து, காத்திருப்பு பகுதிக்கு சென்றோம். அந்த ஒரு மணிநேரத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையத்தை சுற்றி பார்த்தோம் படுமோசமான உள் அலங்கரிப்பு, மூன்றாம் தரமான வடிவமைப்பு போல் இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டபட்டது போல் பழுப்புக் கூடி காட்சியளித்தது. பின்னர் அறிந்துகொண்டேன் சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் சூழியலைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ளது, முடிந்த அளவிற்கு மறுசுழற்சி செய்ய கூடிய கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்கற்களும், சிமெண்டும் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. என்ன இருந்தாலும் வடிவமைப்புக்கு பத்துக்கு இரண்டு மதிப்பெண்கள் கொடுக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.
ஆறு பேரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், ஜார்ஜ் முதல்முறையாக ஒரு ட்ரீம்லைனர் வகை விமானத்தில் நாம் பயணிக்கிறோம் என குதூகலித்தார். இளவயதில் விமானியாக இருந்த நிக்கி ட்ரீம்லைனர் விமானம் என்றால் என்ன என்ற பாடத்தை எடுத்தாள்.
போயிங் 787 ட்ரீம்லைனர் அகலமான ஜெட் விமானம், அதிக இட வசதி கொண்டது. ஒரு சராசரி விமானத்தில் இரண்டு வரிசையில் மட்டுமே பயணிகள் அமர இயலும், ட்ரீம்லைனர் விமானத்தில் மூன்று வரிசையில் இருக்கைகள் உண்டு, நடு வரிசையிலும், இடது, வலது வரிசையிலும் தலா மூன்று பேர் உக்கார இயலும் . ஆக ஒரே நேரத்தில் வலதிலிருந்து இடது வரை நீளும் வரிசையில் ஒன்பது பேர் உட்கார இயலும் அளவிற்கு விமானம் அகலமானது. நிக்கிதா இவற்றை எல்லாம் விளகிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியர் ஜெயமோகனுக்கு பயணத்தைப் பற்றிய மின்னஞ்சலைத் தட்டினேன்.
இந்த விமானத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவெனில் விமானம் தரையிலிருந்து எத்தனை அடி உயரத்தில் பறக்கின்றது, எந்த வேகத்தில் பறக்கின்றது, எந்த தேசத்தின் , சமுத்திரதத்தின் மேல் பறக்கின்றது என்பதை ஒரு பயணியால் உடனுக்குடன் பார்த்து ரசித்துவர இயலும். இன்னும் எத்தனை தூரம் பயணிக்கவேண்டும், எத்தனை மணிக்கு நீங்கள் சிங்கப்பூரை அடையாளம் என்பது வரை துல்லியமாக மின் திரையிலிருந்தே அறிந்துகொள்ள இயலும், நாம் மகிழுந்து வாடகைக்கு எடுக்கும் செயலிகளில் வருவதை போல் விமான பயணத்தையும் பயணிப்பவரால் கண்காணிக்க இயலும்.
இந்த விமானத்தின் பணிப்பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர், சீன உடல் கொண்ட பெண்கள் சரளமாக தமிழ் பேசினர், தமிழ் உடல்கொண்ட பெண்கள் மலாய், சைனீஸ் ஆகிய மொழிகளில் பயணிகளுக்கு உதவினார். இவர்களின் சீருடை அழகாக இருந்தது. வெவ்வேறு நிலத்தை பூர்விகமாக கொண்ட மனிதர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தேசத்தின் பிரதிநிதியாய் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அணிந்த வண்ண உடை ஆப்ரிக்க பழங்குடிகள் அணியும் ஆடையை நினைவுபடுத்தியது
விமானம் கிளம்பும் முன் என் வலக்கையை இருகப்பற்றிய நிக்கிதா "இந்த எட்டு வருடத்தில் நமது அதிகபட்ச உரையாடல் பயணம் என்ற ஒற்றை துதிப்பாடலாகவே இருந்துள்ளது என்பதை எண்ணும்போதே நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீளத் துவங்கி விடுகிறது அல்லவா" ? என பயணத்திற்கான மனநிலையை அமைத்துக் கொடுத்தாள், இடது கையின் அருகே அமர்ந்திருந்த சிங்கப்பூர் அழகியும், கண்ணில் பட்ட விமானப்பணி பெண்களும் எங்கள் உரையாடலின் மத்தியில் வடிவிழந்த மேகங்களாய் களைந்து சென்றனர்.
- மேலும்
Comments