சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.
(பெரனாகன்களுக்கு சொந்தமான மாளிகைகள்)
"தொன்மை குறைவான தேசங்கள் வரலாற்றின் சிறு துரும்பைக்கூட அசைக்க விரும்புவதில்லை. எவ்வகையிலேனும் அண்மைத்தகவலைக் கூட வரலாறாக மாற்றிக்கொள்ளும் சர்வாதிகார தேசங்களுக்கு மத்தியில் சிங்கப்பூர் போன்ற நாடு தனக்கான வரலாற்றை தக்கவைத்துக்கொள்ள பண்பாட்டு இணைவை பேண வேண்டியதன் அவசியம் புரிந்தது."
சீனக்கட்டிடத்தில் ஓர் செட்டிநாடு
சிங்கப்பூரை சாங்கி விமான நிலையத்திலிருந்து நகரை அடைவதற்கான மலிவான போக்குவரத்து சேவையாக மெட்ரோரயில் இருந்தது. ஒரு நாள் முழுவதும் சுற்றுலா பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க சலுகை விலையில் பயண அட்டை விமான நிலையத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. அந்த பயண அட்டையின் விலை பன்னிரண்டு சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் 750 ரூபாய்). அதை வாங்கி பயணிப்பதில் எங்களுக்கு ஒரு சிக்கல் இருந்தது. பயண அட்டையை இருபத்திஇரண்டு சிங்கப்பூர் டாலர்கள் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் (இந்திய பதிப்பில் 1400 ரூபாய்). பயணம் முடித்து அந்த அட்டையை திருப்பி அளித்தால் மீதமுள்ள பத்து சிங்கப்பூர் டாலர்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பயண அட்டையை விற்பனை செய்யும் அலுவலகம் நாங்கள் சென்ற நேரத்தில் திறந்திருக்கவில்லை. காத்திருந்து வாங்கினாலும் நாங்கள் அட்டையை திரும்பி கொடுக்கும் நேரத்திற்கும், அலுவலகம் திறந்திருக்கும் நேரத்திற்கும் ஒத்துப்போகாது. இந்த காரணத்தால் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த பயண சீட்டை வாங்கிக்கொண்டு பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த குழப்பமான நிலையில் நாங்கள் அனைவரும் குழுவாய் நின்று விவாதிக்க துவங்கினோம். தனித்தனியான பயண சீட்டுகள் எடுத்தால் நாள் ஒன்றுக்கே இந்திய மதிப்பில் 1500 ரூபாய் வரை செலவாகும். எங்களின் மொழியை அறிந்திருக்காத போதிலும், எங்களிடம் நிலவிய பதற்றத்தை உணர்ந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். பர்தா அணிந்திருந்த அந்த அழகிய முதிய பெண்மணியின் உதட்டு சாயம் அடர் நீலத்தில் இருந்தது.
சர்வதேச வங்கி அட்டை எதுவாக இருந்தாலும் அதை கொண்டு நாங்கள் ரயிலில் பயணிக்க இயலும் என்று தெரிவித்தார். ரயில் ஏறும் சமயத்திலும், இறங்கும் சமயத்திலும் அருகில் உள்ள நுழைவாயில் கதவுகளில் எங்கள் வங்கி அட்டைகளை காண்பித்தால் வங்கி கணக்கிலிருந்தே பயணத்திற்கான கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற நற்செய்தியை சொன்னார். சிங்கப்பூரின் அரசு பேருந்துகளிலும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் பின்னர் தெரிந்துகொண்டோம்.
(பயண திட்டங்களை யோசித்தபடி சிங்கப்பூர் மெட்ரோவில்)
எங்களின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி சாங்கியிலிருந்து ஏனோஸ் மெட்ரோ ரயில் நிலையம் வரை சென்றோம், அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலாச்சார செறிவுமிக்க கூன் செங் சாலை வரை நடந்து சென்றோம். சிங்கப்பூரின் ஜு சியாட் பகுதியில் அமைந்துள்ளது கூன் செங் சாலை, இது பெரும்பாலும் "பெரனாகன்" எனப்படும் சமூகத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் நிறைந்த பகுதி. சீனர்களுக்கும், மலாய் மக்களுக்கும் திருமண உறவில் பிறந்த சந்ததிகள் பெரணகன் என அழைக்கப்படுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனாவிலிருந்து புலம்பப்பெயர்ந்த பெரணகன்கள் இந்தப் பகுதியில் குடியேறினர். கடல் கடந்த வணிகத்தில் அதிகம் புழங்கியவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியிலும், அதன் கலாச்சார பன்முகத்தன்மைக்கும் முக்கியப் பங்களித்தனர். தெற்காசியாவில் அவர்கள் வாழ்ந்த நகரங்களில் தனித்துவமான அழகியல்களுடன் கூடிய பல கட்டிடங்களை அமைத்தனர், இந்தவகை கட்டிடங்கள் பெரனாகன் கட்டிடக்கலைக்கு சான்றாய் உள்ளது.
மென் வண்ணங்கள் தீட்டப்பட்ட அழகிய இரண்டு முதல் மூன்று-அடுக்குகொண்ட மாளிகைகள் கூன் செங் சாலையில் வரிசையாய் உள்ளன. பெரனாகன்களுக்கு சொந்தமான இந்த மாளிகைகள் கடையுடன் கூடிய வணிகர் வசிப்பிடமாக செயல்பட்டன. இந்தவகை பெரனாகன்களின் கடைவீடுகள் அவற்றின் பிரகாசமான வண்ண முகப்புகளுக்கு புகழ் பெற்றவை. அடர் நிறங்களுக்கு மாற்றாக பளிச்சிடும் நீலம், பச்சை, பிங்க், மஞ்சள் போன்ற புத்துணர்வு சாயல்கள் இந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறங்கள் நகர்ப்புற நிலப்பரப்பின் வழமையான கருப்பு-வெள்ளை தோற்றத்திற்கு துடிப்பான பளிச்சிடும் அம்சத்தை அளிக்கிறது.
பெரனாகன் கட்டிடக்கலையின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அலங்கார ஓடுகளின் பயன்பாடு. "பெரனாக்கன் டைல்ஸ்" என்று அழைக்கப்படும் ஓடுகள் கொண்டு மலர் வடிவங்கள், ஃபீனிக்ஸ்கள், டிராகன்கள், புராண சின்னங்கள் போன்ற நேர்த்தியான வடிவியல் தோற்றங்கள் உருவாக்கப்பட்டு விடுதிகளின் முகப்பில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்களில் உள்ள கவிகை அடுக்குகள் (louvered) கொண்ட ஜன்னல்கள் முகப்பின் அலங்காரத் தோரணையை மேம்படுத்துவதைத் தாண்டி இயற்கையான காற்றோட்டத்தை கட்டிடத்துக்குள் சீராக அனுமதிக்கின்றது. பெரனாகன் கட்டிடக்கலை அதன் விரிவான மரச்சிற்ப வேலைப்பாடுகளுக்காகவும் போற்றப்படுகிறது, சிக்கலான மலர் உருவங்கள், மங்களகரமான சின்னங்கள் பொதுவாக கதவுகளிலும், வீட்டின் முகப்பிலும் ஜன்னல்களிலும் காணப்படுகின்றன. இது பெரனாகனின் கைவினை திறனைப் போற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. பால்கனிகள் மற்றும் படிக்கட்டுகளில் உலோகங்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள அலங்கார வடிவமைப்புகள் கட்டிடத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியையும் கவர்ச்சியையும் அதிகரிக்கிறது. சீனா, இந்தோனேசியா, ஐரோப்பா ஆகிய மூன்று நிலப்பரப்பின் கட்டிடக்கலைகளின் கலவையென பெரனாகன் கட்டிடக்கலையை குறிப்பிடலாம்.
பெரனாகன்களின் மாளிகைகளைத் தாண்டி இந்தச் சாலையில் மலாக்கா ஹோட்டல், சாரிஸ் மெத்தடிஸ்ட் தேவாலயம், சிம் போ செங் கோயில், கூன் செங் கோர்ட் மற்றும் டிவோலி கிராண்டே போன்ற சிறப்புமிக்க கட்டிடங்களும் உண்டு, நேரத்தைக் கணக்கில் கொண்டு நாங்கள் பெரனாகன் மாளிகைகளை மட்டும் வெளியிலிருந்தே கண்டோம்.
பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான லீ கூன் சோய் (1924-2016) என்பவர் பெரனாகன் கலாச்சாரத்தைப் பற்றி கோல்டன் டிராகனும் பர்பிள் பீனிக்ஸ்சும் (Golden Dragon and Purple Phoenix) என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் அடிப்படையிலிருந்து பெரனாகன் சமூக அமைப்பைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடியும்.
ஆண் பெரனகன்களை பெரும்பாலும் "பாபாக்கள்" என்றும், பெண்களை "நோனியாக்கள்" என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. மொழி ரீதியாக, பாபாக்கள் மலாய்க்காரர்கள், ஆனால் இனரீதியாக அவர்கள் சீனர்களாகவே இருக்க விரும்பினார். சிங்கையில் குடியேறிய ஆரம்ப நாட்களில் மக்கள் தங்கள் வம்சாவளியைப் பற்றி அதிகம் அக்கறை காட்டிக்கொள்ளவில்லை அல்லது கடுமையான இன எல்லைகள் தங்களுக்குள் வகுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.
புலம்பெயர்ந்து குடியேறிய சீனர்களுக்குள்ளே நாளைடைவில் பாகுபாடு உருவாகியுள்ளது. மலாக்காவில் (இன்றைய சிங்கப்பூர்) வசிப்பவர்களை விட பெணாங்கிள் ( இன்றைய மலேசியா) வசிப்பவர்கள் வசதி படைத்தவர்களாக தங்களை முன்னிறுத்திக்கொண்டனர். சீன வம்சாவளி கொண்ட மலாய் பேசும் பெண்களான "நோனியாக்கள்" அவர்கள் சிகை அலங்கரிக்கவும், உடையை சீராய் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தும் ஊசிகளைக் கொண்டு தங்கள் சமூக அந்தஸ்த்தை நிலைநாட்டினார். நம்மூர் பெண்கள் பயன்படுத்தும் துருவேறிய சிலைடு ஊசியையே நோனியாக்கள் தங்கத்திலும், வெள்ளியிலும் , யானைத்தந்தத்திலும் செய்து பயன்படுத்தினர். இன்றும் கூட சிங்கப்பூர், மலேசியா வாழ் பெண்கள் விலை உயர்ந்த ஆடம்பரமான கொண்டைஊசிகளை பயன்படுத்துவதை நம்மால் காண முடியும். இந்தப்பழக்கம் சீனர்களிடமிருந்தே பரவியிருக்கும்.
கூன் செங் சாலையை நடந்த படியே ரசித்த போது , நான் முன்னர் சுற்றி அலைந்த செட்டிநாட்டின் கானாடுகாத்தான், ராஜஸ்தானத்தின் செகாவதி, குஜராத்தின் சித்தபூர், கோவாவின் ஃபோன்டைன்ஹாஸ் போன்ற பகுதிகளும் நினைவுக்கு வந்தன. உலகின் பெரும்பான்மை வணிக சமூகங்கள் அவர்கள் கண்டு வந்த நிலப்பரப்பின் அழகியல் கூறுகளை இணைத்து தங்களுக்கென தனித்துவமான கலப்பின கலாச்சாரத்தை உருவாக்கினர். இந்த இணைவு அவர்களின் மொழியில், உணவு வகைகள், ஆடைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் தெளிவாகப் புலப்படுகிறது. மேலும் வணிக சமூகங்கள் கலை மற்றும் கைவினைத்திறனின் புரவலர்களாக இருந்தனர். ஒருவகையான மேட்டிமை சமூகத்தின் ஆடம்பர பாரம்பரியத்தை வணிக குடிகள் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் உருவாக்கினர்.
கடந்த காலத்தின் ஆடம்பரங்கள் பிரம்மிப்பை அளிக்கக்கூடியது. அதேவேளையில் இப்பகுதிகளில் பழமையை சுமந்து தனித்து வாழும் முதியோரின் வாழ்வு கவலை அளிக்கக்கூடியது. பளிச்சிடும் மஞ்சள் மாளிகையின் முன் காகிதப்பூக்கள் பூத்து நிறைந்திருந்தது. வெளியே அமர்ந்திருந்த பெண்மணி வழுவழுப்பான சீனர்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தாள். முதுகில் பைகளை சுமந்தபடி குழுவாய் அலைந்த எங்களைக் கண்டு பெரிதாக அவள் அலட்டிக்கொள்ளவில்லை, நகர் நுழைந்து வீதி வீதியாய் வணிகம் செய்த அவளின் முன்னோர்களென அவள் எங்களை எண்ணி இருக்கலாம். அவளையே உற்று நோக்கி புகைப்படம் எடுக்க முயன்ற எங்கள் கேமராக்களை நோக்கி, இந்தியர்களா என வினவினாள்? . எங்கள் பதில் கேட்டதும் தன் வீட்டினுள் காஞ்சிபுரத்திலிருந்தும், பனாரஸிலிருந்தும் நெய்யப்பட்ட பட்டுத்துணியில் தான் திரைச்சீலைகள் உள்ளது என்றார். அவளின் தங்கப்பல் பகல் ஒளியில் மழுங்கிப்போய் தோற்றமளித்தது.
கூன் செங் சாலையைக் கண்டபின்னர் மீண்டும் ஏனோஸ் மெட்ரோ நிலையத்திற்கு வந்தோம். அங்கிருந்து ஜாலான் பெசார் மெட்ரோ ரயில் நிலையம் வரை சென்றோம். அங்கே எங்களுக்காக கணேஷ் பட்டர் காத்திருந்தார். கம்பராமாயண வாசிப்பு நிக்கிதாவிற்கு அளித்த கொடைகளில் கணேஷ் ஐயாவின் நட்பு முக்கியமானது. எங்கள் பயண திட்டங்கள் பெரும்பாலும் குறைந்த செலவில் திட்டமிடப்படுவதால் செல்லும் இடங்களில் அடைப்படை தேவைகளுக்காக நண்பர்கள் உதவியளிக்க முன்வந்தால் நாங்கள் மறுப்பதில்லை. அந்த வகையில் நாங்கள் சிங்கப்பூர் வருவதை நண்பர்கள் சிலர் கணேஷ்க்கு தெரியப்படுத்திருந்தனர். நிக்கிதாவும் அவரை அழைத்து நேரம் இருந்தால் வந்து சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.
என்ன நேரம் இருந்தால் ....? இருக்கும் நேரம் எல்லாம் உங்களுடன் நான் செலவிடுகிறேன் என தொலைபேசி உரையாடலிலே கணேஷ் உற்சாகமாகிவிட்டார். நாங்கள் வருவதற்கு அரைமணிநேரம் முன்னதாகவே மெட்ரோ ரயில்நிலையத்தில் எங்களுக்காக காந்திருந்தார். அலுவலக அதிகாரியை போல் இஸ்திரி போட்ட வெள்ளை சட்டையும், கருப்பு கால்ச்சட்டையும் அணிந்திருந்தார். நெற்றி நிறைய திருநீறு அணிந்து, மத்தியில் குங்குமம் சூடி மங்களகரமாய் எங்களை வரவேற்றார்.
ஜாலான் பெசார் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் கணேஷ் நடத்தும் "செட்டிநாடு கறி பேலஸ்" என்ற பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் உள்ளது. உணவகத்தை கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கணேஷ் குடும்பத்துடன் சேர்ந்து நடத்தி வருகிறார். கணேஷின் மகன் அன்பு பல நாள் பழகியவருக்குரிய புன்னகையுடன் எங்களை வரவேற்றார். கடையில் எங்களுக்காக சிறப்பு உணவுகள் தயாராகி இருந்தன. தமிழகத்தின் ஜூனியர் குப்பண்ணா வகை உணவுகங்களை விட பலமடங்கு தரத்திலும் தூய்மையிலும் கணேஷின் உணவகம் சிறந்து விளங்கியது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவின் தரத்தை கவனிப்பதில் சிங்கப்பூர் அரசு எப்போதும் தீவிரமாய் உள்ளது. முதல்தர சமையல் மூலப்பொருட்களையே கணேஷின் உணவகத்தில் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். நம்மூரில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் காரசார மசாலாக்களின் நெடியும், உறைப்பும் இவர்களின் உணவில் இல்லை என்பதே இவர்களின் உணவு செய்முறை தரத்தின் சான்று.
(கணேஷின் செட்டிநாடு கரி பேலஸ் உணவகத்தின் முன்)
கணேஷின் உணவகம் மதியமும், இரவும் மட்டும் தான் செய்லபடும். எங்களின் வருகையையொட்டி அன்று காலை பத்து மணிக்கே கடை திறக்கப்பட்டு இட்லி, பூரி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. உணவகம் இருந்த பகுதியை சுற்றிலும் நூறு வருடம் பழமையான சீனர்களின் பாரம்பரிய கட்டிடங்கள் இருந்தன. இன்று கணேஷின் உணவகம் இருக்கும் கட்டிடம் கூட சீனர்களின் கட்டிடம். அதை இடிக்கவோ, மாற்றி அமைக்கவோ அரசாங்கம் அனுமதி வழங்காது என அன்பு அண்ணன் தெரிவித்தார். கணேஷின் உணவகத்தில் ஆத்தங்குடி தரை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு தூண்கள் கொண்டு உள்அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீனக்கட்டிடத்தில் ஓர் செட்டிநாடு என நண்பர்கள் சொல்லி சிரித்தோம்.
தொன்மை குறைவான தேசங்கள் வரலாற்றின் சிறு துரும்பைக்கூட அசைக்க விரும்புவதில்லை. எவ்வகையிலேனும் அண்மைத்தகவலைக் கூட வரலாறாக மாற்றிக்கொள்ளும் சர்வாதிகார தேசங்களுக்கு மத்தியில் சிங்கப்பூர் போன்ற நாடு தனக்கான வரலாற்றை தக்கவைத்துக்கொள்ள பண்பாட்டு இணைவை பேண வேண்டியதன் அவசியம் புரிந்தது.
கணேஷும், அன்பு அண்ணனும் எங்கள் பயணத்திட்டத்தைப் பற்றி எங்களிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டனர். அவர்களும் சில இடங்களைச் சென்று பார்ப்பதற்கு பரிந்துரை செய்தனர். காலையுணவை நாங்கள் முழுவதுமாய் உண்டு முடிப்பதற்குள்ளாகவே மதிய உணவிற்கான ஆர்டர்களை எங்களிடம் அன்பு அண்ணாவும் அவரின் ஊழியர்களும் கேட்கத் துவங்கினர். இப்படியே நீண்டால் சிங்கப்பூர் முழுவதையும் உணவு தட்டிலேயே பார்த்து முடித்துவிடுவோம் என்பதை சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
எங்களுக்கு பயண அலுப்பு ஏற்படாமல் இருக்க எங்களின் பயண சுமைகள் அனைத்தையும் உணவகத்திலேயே வைத்துத் செல்லும்படி அன்பு அண்ணன் அன்புக்கட்டளையிட்டார். விடியலில் நாங்கள் மீண்டும் விமான நிலையம் செல்ல மலையாளி ஒருவரின் வாகனம் ஒன்றையும் எங்களுக்காக ஏற்பாடு செய்தார். மீண்டும் ஜாலான் பெசார் மெட்ரோ ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சிங்கப்பூரின் தேசிய தாவரவியல் பூங்கா செல்வதென திட்டமிட்டு ரயிலில் ஏறினோம்.
- மேலும்
Comments